செம மூடில் இருந்தார் விஜய். எல்லாம் ‘நண்பன்’ தந்த பூரிப்பு. எல்லா பிரஸ்மீட்டிலும் யாரிடமோ கோபித்துக் கொண்டு வந்தவர் போலவே இருக்கமாக இருக்கும் விஜய், இந்த முறை ரொம்பவே ஜோவியலாக இருந்தது பெருத்த ஆச்சர்யம்.
சுமார் ரெண்டு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்த விஜய், ‘வழியெல்லாம் ஒரே டிராபிக் ஜாம். நடந்து வந்தா கூட எப்பவோ வந்திருக்கலாம், ஸாரி’ என்றார் மலர்ச்சியான குரலில்.
நண்பன்’ படத்தின் பத்திரிகையாளர் ஷோ நடந்தபோது விஜய் சாரால் வர முடியாம போயிருச்சு. வழக்கமா அவரோட படங்கள் எல்லாவற்றும் சார் வந்து உங்களையெல்லாம் சந்திக்கறதுதான் வழக்கம். இந்த முறை வர முடியாமல் போனதால்தான் இப்போ உங்களையெல்லாம் சந்திக்கிறார் என்று இந்த சந்திப்பிற்கான காரணத்தையும் விளக்கினார் அவரது பி.ஆர்.ஓ. பி.டி. செல்வகுமார்.
அப்படியே தனது மிக நீண்ட உரையில் ‘நண்பன்’ படத்தின் கலெக்ஷன் ரிப்போட்டையும் ஏரியா வாரியாக விவரித்தார். எந்திரன் படத்தின் வசூலுக்கு இணையா எல்லா ஏரியாவிலும் வசூலாகியிருக்கு என்ற அவரது வார்த்தையை சற்று உன்னிப்பாகவே கவனித்தார் விஜய். நண்பன் படம் ஒரே வாரத்தில் ரஜினியின் எந்திரனை மிஞ்சிவிட்டதாக தங்களுக்கு ரிப்போர்ட்ஸ் வந்துள்ளதாகவும், அதனை ஆதாரப்பூர்வமாக காட்ட முடியும் என்றும் கூறினர் (பத்திரிகையில் செய்தியாக வெளியிடலாமே!).
குறிப்பாக விஜய் பேசுகையில், ‘இந்தப் படம் ரஜினியின் எந்திரன் பட வசூலுக்கு ஈக்குவலா வந்துள்ளதாகவும், சில இடங்களில் அதை மிஞ்சியதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் மண்டைக்குள் ஏற்றிக் கொள்வதா வேண்டாமா என்று கூடத் தெரியவில்லை,’ என்றார், ரொம்ப அடக்கமான பிள்ளை போல!
சில கேள்விகளை ‘வேண்டாம் விட்ருங்க’ என்பது போலவே டீல் பண்ணினார். நண்பன் கல்விக் கொள்கையை அடிப்படையாக கொண்ட படம் என்பதால் அது குறித்தும் சில கேள்விகள் பறந்தன.
ஆறாவது ஏழாவது படிக்கும் போதே எனக்கு படிப்பு மேல அக்கறையில்லாம போச்சு. அப்பாவோட ஷுட்டிங் போறதுன்னு சினிமா மேல ஆர்வம் திரும்பிருச்சு. என்னை டாக்டராக்கணும்னு அம்மா ரொம்ப ஆசைப்பட்டாங்க. நான் டாக்டராயிருந்தா என்னாயிருக்கும்னு யோசிச்சு பாருங்க என்று கூறும்போதே ஒரு வெட்கச் சிரிப்பு சிரித்தார் விஜய்.
விஜய் சார் பார்க்கறதான் மூடி டைப். எங்ககிட்ட நல்லா ஜோக் அடித்து கலகலப்பா பழகினார்னு ஜீவாவும், ஸ்ரீகாந்தும் எல்லா பேட்டியிலேயும் சொல்றாங்க. அப்படியா? என்றது இன்னொரு கேள்வி.
படம் ஆரம்பிச்ச சில நாட்களிலேயே ரொம்ப ஃபிரண்ட்ஸ் ஆகிட்டாங்க ரெண்டு பேரும். ஃபிரண்ட்சுன்னு ஆகிட்ட பிறகு இறுக்கமா இருக்க முடியாதுல்ல. ரொம்ப ஜாலியா பழக ஆரம்பிச்சிட்டோம் என்றார் விஜய்.
பஞ்ச் டயலாக், ஹீரோயிசம் இல்லாத ‘நண்பன்’ பெரிய ஹிட் என்பதால் இனிவரும் படங்களிலும் இதே ஸ்டைலை ஃபாலோ பண்ணுவீங்களா? இந்த கேள்விக்குதான் சற்று விரிவாக பேசினார் விஜய்.
எல்லாவற்றையும் ஸ்கிரிப்ட்தான் முடிவு பண்ணுது. ஒரு கதைக்கு பஞ்ச் டயலாக் தேவைன்னா பேசிதான் ஆகணும். ஆனால் மற்ற எந்த படத்திலும் இல்லாத ஹீரோயிசம் ‘நண்பன்’ படத்தில்தான் இருக்கு. பஞ்ச் டயலாக் பேசினால்தான் ஹீரோயிசம்னு அர்த்தம் இல்ல. அப்படியெல்லாம் பேசாமலே ஹீரோயிசம் காட்டலாம்ங்கிறதுக்கு இந்த படம்தான் நல்ல உதாரணம் என்றார் விஜய்.
No comments:
Post a Comment