எனது ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று மதுரையில் நடிகர் விஜய் தெரிவித்தார். பிரபல திரைப்பட நடிகர் விஜய் நேற்று மதுரை வந்தார். விஜய் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நண்பன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தங்கரீகல் திரையரங்கில் ரசிகர்கள் முன்னிலையில் தோன்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நான் எப்போது மதுரைக்கு வந்தாலும் மதுரை மக்கள் சிறப்பான வரவேற்பை அளிப்பார்கள். நண்பன் திரைப்படம் மூலம் உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படம் வெற்றி அடைவதற்கு நீங்கள் தான் காரணம். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நண்பன் படத்தில் ஒரு டயலாக் வரும். அதாவது உனக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து அதில் உனது திறமையை காட்டினால் வெற்றி தானாக வரும். அது போல ரசிகர்களாகிய எனது நண்பர்களுக்கு நான் சொல்வது நீங்கள் உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து அதில் திறமையை காட்டி வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
பின்னர் மாலையில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை ஜெயின் மனம் குன்றிய குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் நடிகர் விஜய் உரையாடினார். அந்த குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். 2 ஏழை பெண்களுக்கு கடை வைப்பதற்காக பண உதவி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது, மனம் நலம் குன்றிய இந்த குழந்தைகளை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் என்னுடன் பேசியதில் இருந்து என்னுடைய படம் எந்த அளவிற்கு அவர்களிடமும் சென்றுள்ளது என்பது சந்தோஷமாக உள்ளது. இந்த குழந்தைகளை சந்தித்து பேசியதை நான் என் வாழ் நாளில் மறக்க முடியாது என்றார்.
No comments:
Post a Comment