தலைப்பைப் பார்த்த உடன் விஜய் இயக்கி அவரே நடிக்கப் போகிறாரோ என நினைத்து விட்டீர்களா...? அதுதான் இல்லை. மதராசப்பட்டினம் இயக்குனர் விஜய் இயக்கம் அடுத்த படத்தில் நடிகர் விஜய் தான் கதாநாயகன். தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் 'துப்பாக்கி' படத்தில் தீவிரமாக இருக்கும் விஜய், அடுத்த படத்துக்காக இயக்குனர் விஜய்யிடம் பேசி இருக்கிறார். விக்ரமை வைத்து 'தாண்டவம்' படத்தை இயக்கி வரும் விஜய் அட்டகாசமான ஒரு கதையைச் சொல்லி இளைய தளபதியை இம்ப்ரஸ் பண்ணிவிட்டாராம்.
'தெய்வத் திருமகள்' படத்தில் விக்ரம் நடிப்பை ரொம்பவே சிலாகித்தார் விஜய். 'இந்தப் படத்தில் நான் நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்' என்று நண்பர்கள் பலரிடமும் மனம் விட்டுச் சொன்னார் விஜய். இந்த வாய்ப்பு மேற்கொண்டும் தள்ளிப் போகக்கூடாது என்பதற்காகவே உடனே விஜயை அழைத்து கதை கேட்டாராம். கதை பிடித்துப்போக சட்டென ஓ.கே. சொல்லிவிட்டாராம்.
படத்தின் நாயகி இயக்குனர் விஜய்யின் பேரபிமானம் பெற்ற அமலா பால்! ''நடிகர் விஜய்யுடன் நடிப்பதில் எனக்கு சந்தோஷம்தான்... ஆனால், இந்தக் கதையில் நீங்களே ஹீரோவாக நடிக்கலாம். எனக்கும் சந்தோசமாக இருக்கும். ப்ளீஸ்... எனக்காக நீங்களே ஹீரோவாக நடிக்கலாமே...'' என இயக்குனர் விஜய்யை வற்புறுத்தி வருகிறாராம் அமலா பால்.
விஜய் - அமலா பால் நட்பு பற்றி கோடம்பாக்கமே கும்மியடித்தாலும், 'வெறும் நட்பு மட்டும்தான்...' என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறாராம். ஆனால், நடிகையின் தரப்புதான் இந்த பரபரப்பு செய்தியை ரசித்துப் படிப்பதாக கிசுகிசுக்கிறார்கள் சினிமா வட்டாரத்தில். அடுத்த படத்திலும் அமலா பால் தொடரும் பட்சத்தில் இந்த சர்ச்சைகள் மேலும் தீவிரமாகலாம். எப்படியோ... மைனா வலையில் மைனர் மாட்டாமல் இருந்தால் சரிதான்!
No comments:
Post a Comment