நடிகர் விஜய் நடித்துள்ள தலைவா படம் கடந்த 9–ந்தேதி வெளியாவதாக இருந்தது. இப்படம் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்ட தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தலைவா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. தியேட்டர்களில் முன்பதிவும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆகஸ்ட் 15–ந்தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றும் படம் வெளியாகவில்லை. இதனால் தலைவா படம் எப்போது வெளியாகும்? என்கிற கேள்வி எழுந்தது.
படத்தை எப்படியாவது வெளியில் கொண்டு வரவேண்டும் என்பதில் நடிகர் விஜய், தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின், டைரக்டர் விஜய் ஆகியோர் தீவிர முயற்சிகளை எடுத்து வந்தனர். தமிழகத்தில் படம் வெளியாகாத நிலையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பக்கத்து மாநிலங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் தலைவா படம் திட்டமிட்டபடி ரிலீசாகிவிட்டது.
இதனால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அப்படத்தின் திருட்டு சி.டிக்கள் வெளிவரத் தொடங்கின.
இண்டர்நெட்டிலும் படம் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் ரசிகர்கள், தலைவா படத்தின் திருட்டு சி.டி.க்கள் வைத்திருப்பவர்களை பிடிக்க களம் இறங்கினர். பல இடங்களில் திருட்டு சி.டி.க்களை விற்பனை செய்பவர்கள் கைதானார்கள்.
இதைத்தொடர்ந்து வீடியோவில் தோன்றி பேசிய விஜய், தனது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
தலைவா படத்தில் பலருடைய உழைப்பு அடங்கியுள்ளது. திருட்டி சி.டி.யில் படத்தை பார்க்காதீர்கள். பொறுமையாக காத்திருங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
படத்தை வெளியிடக்கோரி, விஜய், படக்குழுவினருடன் உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்தார்.
இதற்கு அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து படத்தின் டைரக்டர் விஜய், தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் மனு கொடுத்தனர். உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு 5 நாட்களுக்கு முன்னர் அனுமதி பெற வேண்டும் என்ற விதி இருப்பதால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில் தலைவா படம் நாளை மறுநாள் (20–ந்தேதி) ரிலீஸ் ஆகும் என்று நேற்று இரவு திடீரென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான தகவல் வேந்தர் மூவிசின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 20–ந்தேதி படம் வெளியாவதாக விளம்பரங்களும் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு தடைகளை தாண்டி தலைவா படம் வெளியாவது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் திட்டமிட்ட தேதியில் படம் வெளியாததால் தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 400 தியேட்டர்களில் தலைவா படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் தயாரிப்பாளரான சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தியேட்டர் அதிபர்களுடன் சமரசம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைவா பட விளம்பரங்களில் டைம் டூ ஹெட் (தலைமையேற்கும் நேரம் வந்துவிட்டது) என்கிற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. இந்த வாசகங்கள் தற்போது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.
10 நாட்கள் போராட்டத்துக்கு பின் தலைவா படம் வெளியாவதால் அப்படம் திரையிடப்படும் தியேட்டர்களில் ரசிகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். கட்– அவுட்டுகள், விஜய் மன்ற கொடிகள், தோரணங்கள் ஆகியவையும் கட்டப்பட்டு வருகிறது. இதனால் தலைவா படம் வெளியாகும் தியேட்டர்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.
No comments:
Post a Comment